Ad Widget

யாழ். பல்கலையில் விருந்துண்ட பலருக்கும் சத்தி, வயிற்றுப்போக்கு!

jaffna-universityயாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த புதன்கிழமை மதியம் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் பங்குபற்றிய சுமார் எழுபது, எழுபத்தியைந்து ஊழியர்களில் பெரும்பாலானோர் சத்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைவு போன்ற அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

எட்டுப் பத்துப் பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களுள் எழுபது வீதமானோர் இவ்வாறு சுகவீனமுற்றனர் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றினால் விநியோகிக்கப்பட்ட மதிய போசனத்தை சாப்பிட்டோரே, இவ்வாறு உணவு நஞ்சாகி அசெளகரியத்துக்கு உள்ளாகினர் என்று கருதப்படுகின்றது.

கற்கைநெறியை முடித்து கணினி விஞ்ஞானப் பிரிவில் புதிதாக நியமனம் பெற்ற மூவர் ஒன்றிணைந்து இந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விடயம் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பகுதி சுகாதாரப் பரிசோதகர்களுக்கும், சுகாதார வைத்திய அதிகாரிக்கும் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளனர் என்று கூறப்பட்டது.

எனினும், இதற்கு முன்னரே விடயத்தைக் கேள்விப்பட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்விடயம் குறித்து விசாரணை நடத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துவிட்டார் என வேறு சில வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Posts