Ad Widget

யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தரிற்கான தெரிவு குறித்து முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரிற்கான தெரிவு எதிர்வரும் 12ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.


கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டது.

அதற்கமைய இந்த பதவிக்காக ஆறு பேர் விண்ணப்பத்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்து ஒருவரை துணைவேந்தராகத் தெரிவுசெய்ய வேண்டும்.

இதற்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேரவையில் உள்ளோர் வாக்களித்து தெரிவு செய்யும் முறைமை எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அதனை நடத்துவதற்காக மதிப்பீட்டாளர்கள் என நால்வர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து வருகைத்தரவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் காரணம் எதுவும் கூறாமல் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர், துணைவேந்தருக்கான அதிகாரங்களுடன் கடந்த வருடம் மே மாதம் முதல் மூன்று மாத காலத்துக்கு வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த போதிலும் கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அந்தப் பணிகளைப் பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டதுக்கமைய தெரிவு பிற்போடப்பட்டிருந்தது.

அதன்பின்னர் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட பின்னர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழகங்களின் பேரவைகளும் செயலிழந்ததன் காரணமாக இழுபறிப்பட்ட துணைவேந்தர் தெரிவு, கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய இரத்துச் செய்யப்பட்டிருந்ததுடன், பேராசிரியர் க.கந்தசாமிக்குத் தகுதி வாய்ந்த அதிகாரியாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நியமனம் நீடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் கோரப்பட்டிருந்ததுடன், அதற்கு பலர் விண்ணப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts