Ad Widget

யாழ். பல்கலையின் தொண்டர் ஊழியர்கள் பணியிலிருந்து நிறுத்தம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை மதியத்துடன் பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாக கொழும்பு பல்கலைக்கழக ஊழியர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை நேற்று நடத்தினர்.

சம்பள அதிகரிப்பு கேட்டு அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே யாழ். பல்கலைக்கழகத்தின் தொண்டர் பணியாளர்கள் பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபடும் அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் இன்று சனிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார்.

முன்னதாக கல்விசாரா ஊழியர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் திறைசேரிப் பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று வியாழக்கிழமை பேச்சு இடம்பெற்றது. இந்தப் பேச்சின்போது ஆண்டுக்கு 36 கோடி ரூபாவை ஒதுக்க திறைசேரி பிரதிநிதிகள் முன்வந்தனர். ஆனால் இது கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றப் போதாது என கூட்டுக்குழுவின் பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இரு சுற்று நிருபங்களை வெளியிட்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளது எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related Posts