Ad Widget

யாழ்.பல்கலையின் ஆண்கள் விடுதியில் சிங்கள மாணவர்கள் அடாவடி

யாழ்.பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மாணவர்கள் சிலர், அங்கு அரசியல் கட்சி சம்பந்தமான பரப்புரை நடவடிக்கையை மேற்கொண்டதோடு, அவர்களை தடுக்க முயன்ற விடுதி காவலரை அச்சுறுத்தியும் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்கு காரில் வந்த யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் மூவர், விடுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து தாம் தென்னிலங்கையின் அரசியல் கட்சி ஒன்றினை சார்ந்தவர்கள் என்றும், பரப்புரை கூட்டம் ஒன்றினை மாணவர்கள் மத்தியில் நடாத்துவதற்காக வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனை தடுக்க முயன்ற விடுதி காவலரை தாக்க முற்பட்ட குறித்த மாணவர்கள், தாம் புலனாய்வாளர்கள் என்றும், தம்மை தடுத்து நிறுத்தினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்குமெனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பல்கலை விரிவுரையாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதோடு, பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனினும், அங்கு வந்த பொலிஸார், குறித்த சிங்கள மாணவர்களுடன் உரையாடிவிட்டு சென்றுவிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தம்மிடம் இதுகுறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரச்சினை ஏற்படுத்தியவர்களில் இருவர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் மற்றுமொருவர் பல்கலைக்கழகத்தினை சாராதவர் என்றும் குறிப்பிட்டார்.

குறித்த இரு மாணவர்களில் ஒருவர் அண்மையில் பல்கலையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக தண்டிக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், குறித்த மூவரும் அரசியல் கட்சி சார்ந்த பரப்புரையில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பாக தமக்கு தகவல் கிடைக்கவில்லையென துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மேலும் தெரிவித்தார்.

Related Posts