Ad Widget

யாழ். பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை?

யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கொழும்பு உயர்மட்ட தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கும் பணிகள் அண்மையில் இடைநிறுத்தப்பட்டன.

தூபி அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில், பல்கலை நிர்வாகத்தினால் குறித்த தூபி அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துமாறு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அத்துடன் தூபியை அமைப்பதற்குத் தடையும் விதிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தூபியை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

அத்துடன் இந்தத் தூபி அமைக்கும் விடயம் தொடர்பில் முன்னின்று செயற்பட்டுள்ள மாணவர்களிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts