Ad Widget

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படடதைக் கண்டித்து ஐ.நாவுக்கு மகஜர்

யாழ் பல்கலைக்கழக மாணவா்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்ட முடிவில் சகல அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம், சிவில் சமூகம், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொது மக்களின் கையொப்பங்களுடன் மகஜர் ஒன்று ஐநாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசியல் மற்றும் குடியியல் சமூகத்தினராகிய நாம் அண்மைக் காலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில் தங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மகஜரை அனுப்பி வைக்கின்றோம்.

மே 2009 இற்குப் பின்னராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகளின் சுருக்கப் பட்டியல் பின்வருமாறு:

1. ஒக்டோபர் 2011 இல்யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அப்போதைய தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பல்கலைக்கழக சுற்றாடலிலிருந்து 500 மீற்றருக்குட்பட்ட சன நடமாட்டமுள்ள பிரதேசத்தில் கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டார்.

2.18 மே 2012 அன்று முள்ளிவாய்க்கல் நினைவு தினம் தொடர்பிலான வைபவம் ஒன்றைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதனை குழப்புவதற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் பல்கலைக்கழக சுற்றாடலிலிருந்து 200 மீற்றருக்குட்பட்ட சன நடமாட்டமுள்ள பிரதேசத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டார்.

3. 27.11.2012 அன்று 75க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த இராணுவத்தினரும் 50க்கு மேற்ப்பட்ட சீருடை அணியாத புலனாய்வுப் பிரிவினரும் யாழ். பல்கலைக்கழக ஆண், பெண் விடுதிகளுக்குள் புகுந்து குறிப்பாகப் பெண்கள் விடுதியில் மிகவும் மூர்க்கத்தனமாக நுழைந்து சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததோடு, மாணவிகளையும் மிகமோசமானமுறையில் அச்சுறுத்தியிருக்கிறார்கள்.

4. 28.11.2012 அன்று 27ஆம் திகதி அன்று நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் அமைதியான முறையில் பல்கலைக்கழக முன்றலில் அமைதிப் போராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது ஆயுதம் தரித்த பொலிஸாரும் இராணுவத்தினரும் மாணவர்களைத் தாக்கினர்.

5.29.11.2012 மற்றும் 30.11.2012 அன்று யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் ஒரு வாரத்திற்கு முன்பதாக அமைக்கப்பட்ட இராணுவ ஒட்டுக் குழுவான சிறிரெலோவின் அலுவலகத்தின் மீதுதாக்குதல் நடாத்தியமை என்ற பொய்க் குற்றச்சாட்டொன்றின் பெயரில் பல்கலைக்கழக மாணவர்களான கனகசுந்தரசாமி ஜனமேஜெயந்த், சண்முகம் சொலமன், கணேசமூர்த்தி சுதர்சன் மற்றும் பரமலிங்கம் தர்ஸானந்த் ஆகியோரை பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைதுசெய்து வவுனியாவில் இம் மகஜர் எழுதப்படும் வரை தடுத்து வைத்துள்ளனர்.

மேலும் பல பல்கலைக்கழக மாணவர்களையும், கடந்த காலங்களில் மாணவர் ஒன்றியங்களில் உறுப்பினர்களாக இருந்து தமது பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்து வெளியேறியுள்ள பழைய மாணவர்கள் பலரையும் கைது செய்வதற்காக பொலிசார் தேடி வருகின்றனர்.

6. 28.11.2012 க்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தைச் சென்றடைவதற்கான பிரதான வீதியான இராமநாதன் வீதியின் இரு மருங்கிலும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட முகமூடி அணிந்த இராணுவத்தினரும் பொலிசாரும் நிலைகொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினர் பொலிஸாரால் எழுந்தமான முறையில் பதிவு செய்யப்பட்ட பின்னரே பல்கலைக்கழத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

(குறிப்பு: பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் உள்ளும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசியிலும் நேரடியாகவும் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். மேற்படி பட்டியல் பிரதான சில சம்பவங்களை நிரற்படுத்துகின்றதே அன்றி தினமும் மாணவத் தலைவர்களுக்கும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் அரச இயந்திரத்தால் கொடுக்கப்படும் நெருக்கடிகளை முழுமையாகப் பட்டியற்படுத்தவில்லை. குறிப்பாகப் பல்கலைக்கழக ஆசிரிய சமூகத்திற்கெதிராகவும் பல்கலைக்கழக சுயாதீனத்திற்கு எதிராகவும் அரச இயந்திரத்தால் தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்களைப் பற்றி நாம் இங்கு நீட்சி கருதி குறிப்பிடாது தவிர்த்துள்ளோம்).

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமானது தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்திற்கு அதன் ஆரம்பகாலப் பகுதியிலிருந்தே மிகக் காத்திரமான பங்களிப்பை நல்கிவந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலை வழிப்படுத்துவதில் புலமைத்துவ பங்களிப்பையும் செயல்சார் பங்களிப்பையும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் மாணவ சமூகம் தொடர்ச்சியாக வழங்கிவந்துள்ளது.

இத்தகைய பங்களிப்பை இல்லாமல் செய்யும் நோக்கிலும் பல்கலைக்கழக சமூகத்தை மௌனிக்கச் செய்யும் நோக்கிலும் காலத்திற்குக் காலம் அரச இயந்திரம் முயற்சித்து வந்துள்ளது. அதன் அங்கமாகவே போருக்குப் பின்னரான சூழலில் தொடர்ச்சியாக இச் சமூகத்திற்கெதிராக தொடுக்கப்படும் வன்முறைகள் நோக்கப்பட வேண்டும்.

போருக்குப் பின்னரான சூழலில் தொடரும் சனநாயக மறுப்பாக இவ்வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் பார்க்கப்படுவதற்கப்பால் தமிழ்த் தேசிய இருப்பைத் தொடர்ச்சியாக அழிக்கும் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக அமைகின்றன.

இறந்தவர்களை நினைவு கூருவதற்கான உரிமை, பேச்சுரிமை, ஒன்று கூடுவதற்கான உரிமை போன்ற உரிமைகள் மறுக்கப்படுவதற்கு இச்சம்பவங்கள் உதாரணமாக இருக்கின்றன என்பதோடு தமிழர்கள் தனித்துவமான அரசியலை – அவர்களது தேசம் என்ற அந்தஸ்த்திலான அரசியல் முனனெடுப்பை – இல்லாமல் செய்யும் நோக்கிலேயே அரச இயந்திரம் யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் செயற்பட்டு வருகின்றது என நாம் கருதுகிறோம். இதனை சர்வதேச சமூகம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இலங்கை தொடர்பாக இற்றைவரை சர்வதேச சமூகம் எடுத்துள்ள நிலைப்பாடானது தாயகத்தில் வாழும் மக்களுடைய வாழ்வில் எத்தகைய காத்திரமான பங்களிப்பையும் செய்யவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். யுத்தத்தின் போது தமிழர்கள் அழிக்கப்படுவதை பார்த்திருந்த சர்வதேசசமூகம் தற்போதும் எமது தேசத்திற்கெதிரான கொடுமைகளை பார்த்து வாளாதிருப்பது சர்வதேச சமூகத்தின் மீதான நம்பகத்தன்மையைத் மேலும் பாதிப்பதாக இருக்கின்றது.

தமிழ்நாட்டு இளையோர் சமூகம் மற்றும் சர்வதேசததில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர் சமூகத்தை கோருவதாவது:

தமிழ் மாணவர்கள் உட்பட தாயகத்து மக்கள்படும் இன்னல்களை சர்வதேசத்தின் கவனத்திற்;குக் கொண்டு வருவதற்காக தொடர்ச்சியாக முயற்சியெடுக்க வேண்டுமெனவும், தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் கோருகின்றோம்.

நாம் சர்வதேசசமூகத்தைக் கோருவதாவது:

1. தமிழர்களது தேசிய நினைவேந்தலுக்கான உரிமையை உறுதிப்படுத்தல்

2. தமிழ் மாணவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தலும் குறிப்பாக அவர்கள் தமதுஅரசியல் செயற்பாட்டுரிமையைப் பிரயோகிப்பதற்கான சூழலை ஏதுப்படுத்தலும்

3. தமிழ்ப் பிரதேசங்களில் சனநாயக உரிமைகளைப் பிரயோகிப்பதற்கான சூழலை ஏதுப்படுத்தல்

4. மேலே(1), (2), (3)இல் சொல்லப்பட்டுள்ள சூழலை ஏற்படுத்துவதற்கு அத்தியா வசியமான முதல் நடவடிக்கையான தமிழரின் தேசத்தையும், தாயகத்தையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்தல்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts