Ad Widget

யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் விடுக்கும் அவசர அறிவித்தல்…!

jaffna-universityபல்கலைக்கழக மாணவர் சமூகம் யாழ் மக்களுக்கு ஒரு அவசர அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது அவ் அறிவித்தலில்..

யாழ் மாவட்டத்தில் நிகழ்ச்சி வறுமையில் இயங்கிக்கொண்டிருக்கும் அரச சார்பு தொலைக்காட்சியொன்று தனது கேவலமான செயலை வழமைபோல எமக்கெதிராக பரப்புரை செய்துள்ளது.

அதாவது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கவில்லை, எதிர்க்கிறார்கள். தேர்தலில் கூட தமிழ் தேசியக்கூட்டமைப்பை எதிர்த்து வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுள்ளனர் என்ற உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளனர்.

முற்றிலும் தரமற்ற அரைகுறை நபர்களைக் கொண்டு இயங்கும் இந்த தொலைக்காட்சியானது தமிழ் மக்களின் தேசிய உணர்விற்கு எதிரானது என்பதை யாவரும் அறிவர். நேற்று நள்ளிரவுடன் அனைத்து தேர்தல் பரப்புரைகளும் நிறைவடைந்த நிலையில் இத்தொலைக்காட்சி ஆளுந்தரப்பிற்காக இந்த பொய்யான பரப்புரையை மேற்கொண்டமையானது பாரியதொரு தேர்தல் விதி மீறலாகும் என்பதனை நாம் தேர்தல் கண்காணிப்பாளர்களின் கவனத்திற்குக்கொண்டுவருகிறோம்.

யாழ் பல்கலைக்கழகம் என்பது எப்பொழுதும் தமிழ்த்தேசிய நரம்புகளால் ஆழமாகப் பின்னப்பட்டதாகும். எத்தனை அச்சுறுத்தல்கள் எம்மீது திணித்தாலும் எங்கள் ஆத்மாவோடு கரைந்த தேசிய உணர்வினை யாராலும் சிதைத்துவிட முடியாது. இதன்படிதான் ஒவ்வொரு தேர்தல்களின்போதும் தமிழ்த் தேசியத்தின்மீதான எமது பற்றுறுதியினை வெளிக்காட்டுமுகமாக எங்களின் மாணவரொன்றியம் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் இம்முறை தேர்தலிற்காகவும் தமிழ் தேசியத்தை ஆதரித்து தமிழ்பேசும் மக்கள் அனைவரும் யாருக்கு வாக்கிடவேண்டும் என எமது மாணவரொன்றியம் கடந்த இரண்டு நாட்களின்முன் அனைத்து ஊடகங்களிலும் அறிக்கையொன்றை வெளியிட்டது. இதைத் தெரியாமல் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தவறான அபிப்பிராயத்தை தமிழ் மக்கள்மத்தியில் விதைப்பதற்காக இந்த தொலைக்காட்சி தனது கீழ்த்தரமான
செயலை செய்துள்ளது.

அன்புக்குரிய எமது மக்களே!

ஒவ்வொரு ஆக்கிரமிப்பின்போதும் அடக்குமுறைகளின்போதும் “நாங்கள் இருக்கின்றோம்! நாங்கள் இருக்கின்றோம்!! நம்பிக்கையோடு காய்களை நகர்த்துங்கள்!” என்று நமக்கு நாமே ஆறுதல்கூறி தேசிய விடுதலைக் கனவைச் சுமந்தவர்கள் நாம். எங்கள் இலட்சிய தாகத்தை யாராலும் தகர்க்கமுடியாது. எம்மை அடக்கியாள்வோரினதும் அவர்தம் அடிவருடிகளினதும் இத்தகைய விசமத்தனமான பொய்ப்பரப்புரைகளை நம்பாதீர்கள். அன்றும் இன்றும் என்றுமே நாம் தமிழ் தேசியத்தின் பிள்ளைகளே!

அன்புடன்,
பல்கலைக்கழக மாணவர் சமூகம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
19/09/2013.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

‘தமிழ் பேசும் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வாக்களிப்போம்’ – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Related Posts