Ad Widget

யாழ். பல்கலைக்கழக கல்லூரியின் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ். பல்கலைக்கழக கல்லூரியின் கற்கை நெறிகளுக்கு வடமாகாண இளைஞர், யுவதிகள் இணைந்து கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள், உயர்கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ப.சிவானந்தன் தெரிவித்தார்.

கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகில் பல்கலைக்கழக கல்லூரி கட்டிடம் புதிதாக அமைக்கப்படுகின்றது.

இதன் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இங்கு வழங்கப்படும் பயிற்சி நெறிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, திங்கட்கிழமை (02) இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இந்த கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே கோரப்பட்டிருந்த போதும் இதற்கான போதிய விழிப்புணர்வு இன்மையால் குறைவான விண்ணப்பங்களே கிடைத்தன.

நெடுஞ்சாலைகள், உயர்கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் ஒரு நிகழ்ச்சி திட்டமாக வடமாகாணத்துக்கான கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி தொழில்நுட்பம், இயந்திர மின்னணுவியல், ஹோட்டல் முகாமைத்துவம், உணவு தொழில்நுட்பம், பண்ணை இயந்திரத் தொழில்நுட்பம், அழகியல், கட்டிட சேவை தொழில்நுட்பம், கட்டுமானத் தொழில்நுட்பம் ஆகிய 8 விதமான கற்கைநெறிகள் நடைபெறவுள்ளன.

கா.பொ.த உயர்தரத்தில் கணிதம், கலை, வணிகம், விஞ்ஞானம், தொழில்நுட்பப்பிரிவு ஆகிய பாடத்தெரிவுகளில் மூன்று பாடங்களில் சித்திபெற்ற மாணவர்கள் இந்த கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அதிகமான மாணவர்களை உள்வாங்குதல், மாணவர்களை தரமேம்பாட்டுடன் தொழில் சந்தைக்கு அனுப்புதல், தொழில் சந்தைகளின் தேவைகேற்ற பயிற்சி வழங்கல், சமூகம் ஏற்றுக்கொள்ளும் துறையாக கற்கைநெறிகளை மாற்றுதல் ஆகிய 4 குறிக்கோள்களுடன் இந்தக் கல்லூரி செயற்படும்.

இந்தக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியன இணைந்து 310 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனடிப்படையில் வழங்குகின்றன. முதற்கட்ட கடன் வழங்கலுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கற்கைநெறிகளும் 3 வருடங்களைக் கொண்டதாக அமைவதுடன், முதல் ஆறு மாதங்கள் கற்கைநெறியின் ஆரம்ப விடயங்களும், தொடர்ந்து 2 வருடங்கள் தொழில்சார் கற்கைநெறியும், இறுதி 6 மாதங்களும் தொழில் நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படும்.

கற்கைநெறியின் ஆரம்ப விடயங்களைக் கற்பிக்கும் போது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் போதிக்கப்படும் தொடர்ந்து வரும் விடயங்கள் ஆங்கில மொழியில் போதிக்கப்படும்.

அனைத்து கற்கை நெறிகளும் இம்மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தின் இளைஞர்; விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட இந்த கல்லூரி தற்போது, புதிய அரசாங்கத்தின் நெடுஞ்சாலைகள், உயர்கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts