Ad Widget

யாழ் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுப் பட்டமளிப்பு விழாவில் 1939 மாணவர்கள் பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழா யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் சிரேஷட பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் மாணவர்களுக்குரிய பட்டங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

இதில் டிப்ளோமாப் பட்டம் பெறும் 114 மாணவர்களது பட்டங்களும் வெளிவாரியாகப் பட்டம் பெறும் 247 மாணவர்களது பட்டங்களும் அவர்கள் சமுகமளிக்காத நிலையில் பட்டமளிப்பு விழாவில் வேந்தரால் உறுதி செய்யப்பட்டு பிரகடனப்படுத்தப்படும்.

19.01.2016 அன்று முற்பகல் 09.00 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது அமர்வில் 170 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்படும்.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கும் பட்டம் பெறுவதற்கும் சமுகமளிக்கும் ஒவ்வொருவருக்கும் மேலதிகமாக ஒருவர் மண்டபத்தில் பார்வையாளராக அனுமதிக்கப்படுவர்.

பட்டம் பெறுவோர் தமக்குரிய புகைப்பட பிரதிகளையும் வீடியோ பிரதிகளையும் பல்கலைக்கழக கல்விக் கிளையில் அதற்குரிய கொடுப்பனவினைச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

விழாவின் ஒழுங்கமைப்பை நல்ல முறையில் பேணும் வகையில் வேறு புகைப்படப் பிடிப்பாளர்கள் வீடியோப் படப்பிடிப்பாளர்கள் மண்டபத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஊடகவியலாளர்களுக்கு விசேட நுழைவுச்சீட்டு வழங்கப்படும். எனினும் புகைப்படம் எடுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழாவினை மரபு ஒழுங்குகளிற்கு அமைவாக நடாத்துவதற்கும், ஊடகங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts