யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு ஜனாதிபதி விடுக்கும் வேண்டுகோள்

யாழ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சமின்றி சுதந்திரமாக கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் பலகலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வௌியிட்டுள்ளது.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சில குழுக்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களின் பாதுகாப்புக்காக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, யாழ் பல்கலைகழகத்தின் கல்வி தடையின்றி முன்னெடுப்பது அவசியமென்று கூறிய ஜனாதிபதி சிறிசேன வதந்திகளை நம்புவதைத் தவிர்த்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மானவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.

Related Posts