Ad Widget

யாழ் நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (1) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் காலை 9.30 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரண கர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் குறித்த நினைவேந்தலில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் – இலங்கைப் பொலிஸாரினாலும், சிங்கள இன வெறிக் காடையர்களினாலும் யாழ்ப்பாணம் பொது நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டு, சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களும் அரிய ஓலைச் சுவடிகளும் அழிக்கப்பட்ட 42 ஆவது ஆண்டு நினைவு நாள் ஆகும்.

ஈழத் தமிழ் இனப் படுகொலை, கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவை உட்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்காக குற்றவாளிகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிப்போம் என்று இதன் போது தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பொதுசன நூலகத்தில் பிரதம நூலகர் ராகினி நடராஜ் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ம.ஜெயசீலன் நூலக ஊழியர்கள், வாசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாண பொதுநூலகம் 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், பழமையான ஏடுகள் என்பவை பெரும்பான்மை இன வன்முறை கும்பலால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

குறித்த நூலகமே தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts