Ad Widget

யாழ். நீதிமன்ற தாக்குதல் குறித்து விசேட விசாரணை வேண்டும்: டக்ளஸ்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலைச் சம்பவத்தின் பின்னர் யாழ். நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது, யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிலர் எம்மீது குற்றஞ்சாட்டத் தலைப்பட்டுள்ளனர். இதில் எவ்வித உண்மையும் கிடையாது. வடக்கில் சிவில் நிர்வாகத்தையும் சட்டத்துறையையும் கடந்த காலங்களில் மீளக்கட்டியெழுப்ப நாம் அயராது உழைத்தவர்கள்.

மாணவி படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் பிடிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பழியையும் எம்மீது போடலாம் என சிலர் முயன்றனர். ஆனால், அவர்களது முயற்சிகள் எமது மக்களின் முன்பாக எடுபடவில்லை.

இச்சம்பவத்துக்கும், ஈ.பி.டி.பி.யினருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என தனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார். எமது நாட்டு சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் சில அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்ததால் தூண்டப்பட்ட சிலர் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும் ஒரு சந்தேகநபரை பணத்திற்காக விடுவிப்பதற்கு மூவர் முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் அவர்கள் எம்மீது பழியைப் போடுவதன் மூலம் தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணுகின்றனர். ஆனால், இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை எமது மக்கள் நம்புவதாக இல்லை. எனவேதான் இந்நபர்களை அம்மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

வித்தியாவுக்கு ஏற்பட்டதைப் போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்பதையொட்டியே எமது செயற்பாடுகள் தொடரவேண்டும். இதற்காக எமது மக்களிடையே விழிப்புணர்வுகளை நாம் ஏற்படுத்த வேண்டும். அதைவிட்டு அரசியல் இலாபங்களை கருதி செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது. வித்தியா படுகொலை தொடர்பில் விசேட நீதிமன்றம் அமைக்க ஜனபதிபதி அவர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

நாமும் இதை வலியுறுத்தியிருந்தோம். அதேபோன்று காணாமற்போன எமது உறவுகளை கண்டறிவதற்கும், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் விசேட ஏற்பாடுகள் தேவை என நாம் ஜனாதிபதியிடம் கேட்டிருக்கிறோம் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts