Ad Widget

யாழ் நீதிமன்ற தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

யாழ். நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் 20ம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த முற்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தின் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் 130க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி, குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இரண்டு பிரிவுகளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

70ற்கும் மேற்பட்டவர்கள் மீது நீதிமன்றின் மீது தாக்குதல் நடத்தியமை, சிறைச்சாலை வாகனத்தை சேதப்படுத்தியமை, சட்டவிரோதமாக இளைஞர்கள் கூடியமை என, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கிற்கு சமூகமளிக்காதிருந்த சந்தேகநபர் ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், அந்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ம் திகதிக்கும், சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடியமை என்ற வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதிக்கும் ஒத்திவைத்து, நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Posts