Ad Widget

யாழ். நீதிமன்றத் தாக்குதலின் பின்னணியில் ஒட்டுக்குழுக்கள்! – சி.சிறிதரன்

வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரி பல கோணங்களில் நடத்தப்படும் போராட்டங்களை சிங்களவர்களுக்கு எதிரான நடவடிக்கையென மாயையொன்றை உருவாக்குவதற்கு ரெளடி கும்பலொன்று முயற்சிக்கிறது என்றும், இதன் பின்புலத்தில் இராணுவ ஒட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் மீதும் இந்தக் குழுதான் தாக்குதல் நடத்தியதாகவும், விசாரணைகளை திசைதிருப்புவதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என மக்கள் சந்தேகமடைந்துள்ளதாகவும் ஸ்ரீதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய ஆசிரியர் கல்வி அதிகாரசபை (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சிறிதரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“குடாநாட்டில் இடம்பெறும் போராட்டங்களை சிங்கள சகோதரர்களுக்கு எதிரான போராட்டமாக சித்திரிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. வடக்கில் சிங்களவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெறவில்லை. காம வெறியர்களுக்கு உச்சபட்சத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றே எமது மண்ணில் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

எமது மண்ணில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு கடந்த காலங்களில் நீதி கிடைக்கவில்லை. இழுத்தடிப்புகள் செய்யப்பட்டன. மூடிமறைக்கப்பட்டன. இவ்வாறானதொர சூழ்நிலையிலேயே நீதிக்காக போராடுவதற்கு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டங்களை கொச்சைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பகுதியிலிருந்து வந்த கும்பலொன்றே ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்துள்ளது. நீதிமன்றம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகளைத் திசை திருப்புவதற்கும், இராணுவப் பிரசன்னத்தை நியாயப்படுத்துவதற்காகவுமே ரெளடி கும்பல் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றங்கள் மீது தாக்குதல் நடத்தும் பழக்கம் தமிழர்களுக்கு இல்லை என்பதையும் கூற விரும்புகிறேன். அதேவேளை, குற்றவாளிகளை கொழும்புக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. இதற்கான அவசியம் என்ன? குற்றவாளிகள் தொடர்பில் யாழ். நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு அதிஉச்ச தண்டனை வழங்கப்படவேண்டும். இலங்கை வரலாற்றில் அது பாடமொன்றாகவும், அதிர்ச்சி தண்டனையாகவும் அமையவேண்டும். அத்துடன், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகள் விடுவிக்கப்படவேண்டும்” – என்றார்.

Related Posts