Ad Widget

யாழ். நகரில் குழப்பம் விளைவித்த 30பேருக்கு பிணை

யாழ். நகரத்தில் குழப்பம் விளைவித்தமை, பொலிஸ் கண்காணிப்பகம் மீது தாக்கியமை, சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்களில் 30பேருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று வியாழக்கிழமை (18) அனுமதியளித்தார்.

இவர்கள் மாதாந்தோறும் வரும் இறுதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்பதுடன், குற்றச் செயல்களில் ஈடுபட்டு மீண்டும் கைது செய்யப்பட்டால் பிணை ரத்துச் செய்யப்படும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த 20ஆம் திகதி குழப்பம் விளைவித்து, நீதிமன்ற கட்டட கண்ணாடிகளை உடைத்தமை, வளாகத்திலிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தியமை, யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் கண்காணிப்பகத்தை உடைத்தமை மற்றும் சத்திரச் சந்தி வீதிச்சமிக்ஞை விளக்கை உடைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனியாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதில் முதலாம் மற்றும் இரண்டாம் பிரிவுகளான யாழ். நகரத்தில் குழப்பம் விளைவித்தமை, பொலிஸ் காவலரண் மீது தாக்கியமை, சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் பதிவு செய்யப்பட்ட 47 பேரில் 2 மாணவர்களுக்கு முதலாவது வழக்குத் தவணையில் பிணை வழங்கப்பட்டது.

மிகுதி 45 பேரில் 15 பேருக்கு கடந்த வழக்குத் தவணையில் பிணை வழங்கப்பட்டது. மிகுதி 30 பேர் விளக்கமறியலில் இன்று (வியாழக்கிழமை) வரை வைக்கப்பட்டனர். வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் பிணை வழங்கினார்.

புங்குடுதீவு மாணவியொருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்.நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தே மேற்படி அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts