Ad Widget

யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பல்கலைக்கழக கல்லூரிக்கு அடிக்கல்!

tec-jaffnaயாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெறுகிறது. நாடளாவிய ரீதியில் 25 பல்கலைக்கழகக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாணத்தில் மேலும் புதிதாக இந்தப் பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் பிரவுண் வீதியில் அமைந்துள்ள தொழில்நுட்பவியல் கல்லூரி வளாகத்தில் இந்த பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இவ்வைபவம் இன்று முற்பகல் 10 மணிக்கு இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திகுமார், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, தொழிநுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவுசெலவுத் திட்டத்தில் இந்த பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கான திட்டத்தை முன்மொழிந்திருந்தார். நாடளாவிய ரீதியில் 25 கல்லூரிகள் அமைக்கப்படவிருப்பதுடன், ஏழுக்கான வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

115 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். பல்கலைக்கழகக் கல்லூரியில் 50 பாடநெறிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஏனைய கல்லூரிகளில் இல்லாத 26 பாடநெறிகள் யாழ். பல்கலைக்கழக கல்லூரியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள இப்பல்கலைக்கழகக் கல்லூரியானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர் சமுதாயத்துக்கு சிறந்த வாய்ப்பாக அமையவிருக்கிறது,

இங்கு நடாத்தப்படும் டிப்ளோமா பாடநெறிகளை சிறந்த முறையில் பூர்த்திசெய்யும் மாணவர்கள் இரத்மலானையில் உள்ள வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் மூலம் தேசிய தொழில்தகைமை 07 தரத்திலான பட்டப்படிப்பை கற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

Related Posts