யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் நேற்றைய தினம்(01.07.2026) காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்திலே இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள கோள் மண்டல காட்சி தொகுப்பானது வடக்கு மாகாணத்துக்கும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் குறிப்பாக கல்வித் துறைக்கும் ஒரு சிறந்த மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், கோள் மண்டலம் நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட வசதிகளோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான கோள்மண்டலம் சூரியன், நட்சத்திரங்கள் போன்ற விடயங்கள் காட்சியளிப்பது யதார்த்த பூர்வமாக விண்வெளியில் இருக்கத்தக்க வகையிலான உணர்வையும் பிரம்மிக்கத்தக்க வகையிலே நேரடியாக பிள்ளைகள் அறிவியல் சார்ந்த விடயங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதான வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும், கோள்மண்டலம் தொடர்பான அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும் எனவும், இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ள கூடியதாகவும் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை ஆரம்பித்திருப்பது அனைவருக்கும் பார்க்கக் கூடிய வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதாக மாவட்டத்திற்கு உள்ளேயே இவ்வாறான கோள்மண்டலத்தை நேரடியாக பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி தந்தமைக்கு அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், யாழ். தொழிநுட்பவியல் கல்லூரி சமூகத்தினர், அனுசரணையாளர்கள்,நடமாடும் கோள்மண்டலத்தின் இணைப்பாளர், தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினர், யாழ். தொழிநுட்பவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் குறித்த மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் காட்சிக்கூடமானது ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை மாலை 05.00 மணி தொடக்கம் மாலை 06.30 மணிவரையும், இரவு 07.00 மணி தொடக்கம் இரவு 08.30 மணிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாண கல்வி அமைச்சின் அனுமதி பெற்று இது நடைபெறுவதனால் மாணவர்கள் பாடசாலை ஊடாக முற்பதிவு செய்து வழங்கப்படும் நேரத்தில் இதனை பார்வையிட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்களை 077 7826217 அல்லது 076 1089005 தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.