Ad Widget

யாழ். துரையப்பா மைதான புனரமைப்பு : அடிக்கல் நாட்டினார் பஸில்

இலங்கை – இந்திய நட்புறவின் கீழ், இந்திய அரசாங்கமும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து 145 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை புனரமைப்பு செய்யவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றது.

pasil-thuraiyappa-

யாழ்.மாவட்டத்திலுள்ள பொது விளையாட்டு மைதானங்களில் ஒன்றான துரையப்பா விளையாட்டு மைதானம், அனைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும் நிகழ்வுகளை நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும், துரையப்பா விளையாட்டு மைதானம் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்தமையால் விளையாட்டுத் தேவைக்கு தகுந்த முறையில் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், மேற்படி மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்து, புனரமைப்பிற்குத் தேவையான நிதியை வழங்கியுள்ளது. இதனையடுத்து, மைதானத்தை புனரமைப்பதற்கான அடிக்கல் புதன்கிழமை (27) நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts