Ad Widget

யாழ்.சாலை ஊழியர் சங்கங்கள் கட்டமைப்பின்றி உள்ளது : தம்மை பாதுகாத்துக்கொள்ளவே இந்தப் போராட்டம்!!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண சாலை ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டமானது, அரசியல் இலாபத்துக்காகவும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என யாழ்ப்பாண சாலை காப்பாளர் ஜெ.அன்ரன்மயூரன் தெரிவித்தார்.

யாழ்.சாலை முகாமையாளர் அநீதியாக செயற்படுவதாக கூறி, கட்சிகள் சார்ந்த ஊழியர் சங்கங்கள் இணைந்து முகாமையாளருக்கு எதிராக போராட்டம் ஒன்றை புதன்கிழமை (14) நடத்தின.

இந்தப் போராட்டத்தின் போது, இன்னொரு பகுதியான சாலை ஊழியர்கள் குழுவொன்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

இது தொடர்பில் யாழ்.சாலை காப்பாளரிடம் வினாவியபோது,

‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சங்கங்கள் யாவும் முறையற்று தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக்கட்சியின் ஊழியர் சங்கம் தம்மைத்தாமே தலைவர், செயலாளராக தெரிவு செய்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரினிடம் ஒப்புதல் வாங்கி இயங்குகின்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஊழியர் சங்கம் தெரிவுகள் ஊழியர்களால் நிராகரிக்கப்பட்டும், கட்சி சார்ந்து இயங்குகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊழியர் சங்க தலைவர், முன்னர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து கட்சி மாறி மாவை சோனதிராசா மூலம் சங்கத்தை உருவாக்கினார்’ என்றார்.

‘இந்த ஊழியர் சங்கங்கள் ஒரு கட்டமைப்புக்குள் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகள், நடத்துநர்கள் எவரும் இன்றைய தினம் கடமையில் இல்லை. அனைவரும் விடுமுறையில் உள்ளனர். இதனால் பாடசாலை சேவைகள் மற்றும் தனியார் துறையின்றி எமது சேவையை மாத்திரம் நம்பியுள்ள பகுதி மக்களுக்கான சேவைகள் பாதிப்படைந்துள்ளன’ என்றார்.

‘இந்த சாரதிகள் நடத்துநர்கள் அனைவரும் தமது கௌரவத்துக்காகவே வேலை செய்கின்றனர். இவர்கள் இதுவரையில் பணிக்கு வராமல் கையெழுத்து இட்டு சம்பளம் பெற்றனர். இதனை தற்போது செய்ய முடியாது என்பதாலும் தாம் இதுவரையில் செய்த தவறுகள் வெளிவரப் போகின்றன என்பதாலும் தம்மை பாதுகாத்துக்கொள்ள இந்தப் போராட்டத்தை செய்கின்றார்கள்.

இது சரியான போராட்டமாக இருப்பின் எங்களிடம் ஏன் ஆதரவு கேட்கவில்லை?. நடத்தைக் குறைபாட்டால் இவர்கள் பல தடவைகள் இடமாற்றம் பெற்றுள்ளனர்’ என்றார்.

Related Posts