Ad Widget

யாழ். கோட்டையில் மீண்டும் ராணுவம்! : டக்ளஸ் கண்டனம்

வரலாற்று தொன்மைமிக்க சின்னமாக விளங்கும் யாழ்.கோட்டையில், மீண்டும் படையினரை நிலைநிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கில் தமிழ் மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றினால், அவர்களை யாழ். கோட்டையில் நிலைநிறுத்த வேண்டுமென வவுனியாவில் விஹாராதிபதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார். இதன் பின்னணியிலேயே டக்ளஸ் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்தகால யுத்தத்தில் பெரும்அழிவைச் சந்தித்திருந்த யாழ். கோட்டையின் புனரமைப்பு பணிகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்துவரும் இடமாகவும் இது விளங்குகின்ற நிலையில், அங்கு படையினரை நிலைநிறுத்துவதை ஏற்க முடியாதென டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஒரு மாவட்டத்தின் சனத்தொகை மற்றும் இன விகிதாசாரத்திற்கு அமைவாகவே படைத்தரப்பின் இருப்பு அமையவேண்டுமென குறிப்பிட்டுள்ள டக்ளஸ், வடக்கு கிழக்கில் இந்நிலை தலைகீழாக மாறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்பதோடு, மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் இடங்களில் படையினரின் இருப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts