Ad Widget

யாழ்.கோட்டைக்குள் ராணுவத்தை அனுப்பியே தீருவேன் : ஆளுநர் குரே

வரலாற்று தொன்மைமிக்க சின்னமான யாழ்ப்பாண கோட்டையில் இலங்கை படையினரை நிலைநிறுத்துவது குறித்து பல எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும், இந்நடவடிக்கையை செயற்படுத்துவதில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே உறுதியாக உள்ளார்.

அந்ந வகையில் வடக்கில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரை யாழ்ப்பாண கோட்டைக்கு அனுப்பிவைக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனினும், யாழ்ப்பாண கோட்டையானது தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமாக காணப்படும் நிலையில், அதற்குள் எவ்வாறு ராணுவத்தை அனுப்புவீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி தொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த ஆளுநர், யாழ்ப்பாண கோட்டைக்குள் டச்சு, போர்த்துக்கேய, ஆங்கிலேய மற்றும் இலங்கை ராணுவத்தினர் மட்டுமன்றி விடுதலைப் புலிகளும் நிலைகொண்டிருந்தனர். அப்போது, அது தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானதென யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், தற்போது மாத்திரம் எவ்வாறு குறித்த திணைக்களத்திற்குச் சொந்தமாகுமென எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்.

கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரும் அழிவைச் சந்தித்திருந்த யாழ்ப்பாண கோட்டை, தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், உள்ளூர் சுற்றுலா பயணிகள் மாத்திரமன்றி அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து வருகின்றது.

இப்பகுதியில், பலர் சிறு வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில், அங்கு ராணுவத்தை நிலைநிறுத்துவதை ஏற்க முடியாதென பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts