யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள், காணாமல் போயுள்ளதாக அவர்களது பெற்றோரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (30) இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியினை சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோகன் அபிசேக் (வயது 14) மற்றும் டியுக் டியோன் (வயது 14) ஆகிய மூன்று மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மதியம் வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியில் சென்று, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று மாணவர்களும் மாலை ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.
பாடசாலை மற்றும் இதர பகுதிகளில் தேடிய பெற்றோர், இறுதியில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இரவு 11 மணியளவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.