Ad Widget

யாழ்.குடாவில் 7,779 ஏக்கர் தனியார் நிலம் படையினர் வசம்! 10,496 குடும்பங்கள் நிர்க்கதி

இலங்கையில் போர் நிறைவடைந்த பின்னரும் யாழ்.குடாநாட்டில் இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் 7ஆயிரத்து 779 ஏக்கர் தனியாருக்குச் சொந்தமான நிலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 ஆயிரத்து 496 குடும்பங்கள் தமது சொந்தக் காணிகளை இழந்த நிலையில் வாழ்கின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் போருக்குப் பின்னரும் பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலம் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இவற்றுக்கும் மேலதிகமாக கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலத்தை கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

மேற்படி தகவலின்படி மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 10 ஆயிரத்து 359 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 7ஆயிரத்து 608.07 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதில் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ், 112 குடும்பங்களுக்குச் சொந்தமான 151.04 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதேவேளை பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் 25 குடும்பங்களுக்குச் சொந்தமான 18.87 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் மொத்தமாக 10 ஆயிரத்து 496 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார், 7,779 ஏக்கர் காணி இராணுவத்தினர், மற்றும் கடற்படையினர், பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதேவேளை யாழ்.குடாநாட்டில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில் காரைநகர், சண்டிலிப்பாய், பருத்தித்துறை, உடுவில் ஆகிய பகுதிகளில் படையினர் பொதுமக்களுடைய காணிகள் எதனையும் கையகப்படுத்தியிராத நிலையில், கடற்படையினர் மற்றும் பொலிஸார் பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் வெறுமனே உயர்பாதுகாப்பு வலயங்களுக்காக மட்டுமல்லாமல் வெளியிலும் பொதுமக்களின் பல காணிகள் கையப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts