Ad Widget

யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்

யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சுன்னாகம் பகுதியில் ஆரம்பமாகி தெல்லிப்பளை வரையிலான பகுதிகளில் மக்களுடைய குடிநீர் கிணறுகளில் எண்ணெய் படலம் உருவாகியுள்ளதாகவும்,கழிவு எண்ணெய் மற்றும் பார உலோகங்கள் கலந்துள்ளதாகவும் இவ்வாண்டு தொடக்கத்தில் யாழ்.குடாநாடு முழுவதும் பரபரப்பான பேச்சுக்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நிபுணர்குழு வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்டிருந்தது.

மேற்படி குழு கடந்த பல மாதங்களாக பல்வேறு நவீன கருவிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், சுகாதார அமைச்சு உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், வடமாகாண விவசாய அமைச்சின் பங்களிப்புடனும் செயற்பட்டு தனது ஆய்வு அறிக்கையின் இறுதி அறிக்கையை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய மேற்படி ஆய்வு அறிக்கை இன்றைய தினம் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் வைத்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் ஆகியோரிடம் நிபுணர் குழுவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி நிபுணர்குழு தனது ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதாவது,

குடாநாட்டின் சுன்னாகம் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி குடாநாட்டின் நீரில் எண்ணை நச்சுக்கள் இல்லை.

ஆனால் குடாநாட்டு நீர் பாவனைக்கு உகந்தது என்பதை தம்மால் கூறமுடியாது எனவும், தாம் ஆய்வுக்காக பெற்றுக் கொண்ட நீர் மாதிரிகள் அனைத்திலும் மலக்கிருமிகள் மிகமிக அதிகளவு காணப்பட்டுள்ளதாகவும், தமது நீர் மாதிரிகளில் 50 வீதமானவற்றில் அதிகளவு நைத்திரேற்றுக் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருப்பதுடன்,மலக்கிருமிகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நீரை சுடவைத்துப் பருகலாம். ஆனால் நைத்திரேற்று தாக்கத்தை தணிக்க சாதாரணமான வழிகள் இல்லை. எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் குடிநீரை மக்கள் பயன்படுத்த முடியுமா? முடியாதா? என மாகாணசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த நிபுணர் குழு,

நீரில் எண்ணை நச்சுக்கள் இல்லை. ஆனால் நைத்திரேற்று மற்றும் மலக்கிருமிகள் ஆபத்தான அளவில் காணப்படுகின்றது.எனவே இந்த நீரை மக்கள் பயன்படுத்த முடியுமா? என்பதை சுகாதார அமைச்சும் நீர்வழங்கல் அமைச்சுமே முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts