Ad Widget

யாழ்., கிளிநொச்சி உயர்தேசிய டிப்ளோமாதாரிகளின் மனு மீதான விசாரணை மார்ச் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஏனைய மாவட்டங்களில் பட்டதாரி பயிலுநர்கள் நியமனத்துக்கான உயர் தேசிய டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

இந்த மனுவை தாக்கல் செய்த 228 மனுதாரர்கள், பொதுநிர்வாக, உள்நாட்டு அமைச்சர், அவ்வமைச்சின் செயலாளர், பொதுச்சேவை ஆணைக்குழு, திறைசேரி செயலாளர், யாழ். அரசாங்க அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.
மனுதாரர் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், கிஹான் குணதிலக்க, சரித்த டி பொன்சேகா ஆகியோர் மோகன் பாலேந்திராவின் நெறிப்படுத்தலில் ஆஜராகினர்.

பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்ட ஒக்டோபர் 30, 1990 ஆம் திகதிய சுற்றறிக்கையானது இந்த கல்வித் தகைமை வணிகத்தில் ஒரு பட்டத்திற்கு சமமென கூறியது.

இந்த சுற்றறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஸ்ரீலங்கா உயர்தொழில்நுட்ப நிறுவனமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் முந்தைய சுற்றறிக்கைக்கு முரணாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜூன் 25, 2011 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம், டிப்ளோமாதாரிகளை தற்போதைய பட்டதாரி நியமனத்தில் சேர்க்கவேண்டாம் என சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவத்தமையால், பொதுநிர்வாக அமைச்சு உயர் தேசிய டிப்ளோமாதாரிகளையும் பட்டதாரிகள் நியமன திட்டத்தில் சேர்த்துக்கொள்ள தீர்மானித்துள்ளது. ஆயினும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என மனுதாரர்கள் முறையிட்டுள்ளனர்.

தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் அறிவித்து, தம்மை பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்குமாறு பிரதிவாதிகளை பணிக்க வேண்டுமென மனுதாரர்கள் கோரியுள்ளனர். இம்மனு மீதான அடுத்த விசாரணை மார்ச் 5 ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்தது.

Related Posts