Ad Widget

யாழ். ஊடகங்கள் குறித்து வடமாகாணசபையில் காரசார விவாதம்!

வடக்கு மாகாணசபையின் 53ஆம் அமர்வு நேற்ற கைதடியில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெற்ற போது, குடாநாட்டு பத்திரிகைகள் மீது கடுமையான விமர்சனங்களை மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஆனோல்ட், மாகாணசபை உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரேரணையினை சபையில் முன்மொழிந்தார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில்,

யாழ். மாவட்டத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றை கையில் எடுத்து, அந்த பத்திரிகையை மஞ்சள் பத்திரிகை என பேசினார். இதனை தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரிடமிருந்து ஊடகங்கள் தொடர்பான கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 3 பத்திரிகைகள் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆளுங்கட்சி உறுப்பினர்களான ஆனோல்ட், அஸ்மின் மற்றும் பிரதி அவை தலைவர் ம.அன்டனி ஜெயநாதன், பரஞ்சோதி ஆகியோர் ஊடகங்கள் மீதான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக யாழ். ஊடகவியலாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாகவும், பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களான க.விந்தன், சிவாஜிலிங்கம், மற்றும் சர்வேஸ்வரன், சிவனேசன் அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் ஊடகங்கள் மீதான விமர்சனம் தேவையற்றது என வாதிட்டபோதும், ஊடங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறுதியாக பேசிய அவை தலைவர் மஞ்சள் பத்திரிகை என பாவிக்கப்பட்ட வசனத்தையும், ஊடகவியலாளர் ஒருவரின் பெயரையும் அவை குறிப்பிலிருந்து நீக்குவதாக கூறினார்.

இந்நிலையில் காலை 9.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரையில் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் முடிவுக்கு வந்தது. மேலும் மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட் முன் மொழிந்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டு சபை நடவடிக்கை குழுவிடம் கையளிக்கப்படும் என அவைத்தலைவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறாக பேசிய மாகாண சபை உறுப்பினர்களின் உரைக்கு யாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். ‘பணம் பெற்று செய்தி வெளியிடுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டானாது, பாரதூரமானது எனத் தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள், சமூகத்தில் பொறுப்பானவர்களின் இவ்வாறான தான்தோன்றித்தனமான பேச்சுக்கு தங்கள் கண்டங்களையும் தெரிவித்துள்ளார்கள்.

Related Posts