யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் காணப்படுகின்றது.
கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை பொறுப்பேற்க போவதில்லையென உறவினர்கள் தெரிவித்ததை அடுத்தே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இளைஞனது சடலம் வைக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, உதயபுரம் முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில், 25 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச் சன்னம் சுவாசக் குழாயை துளைத்திருந்ததால் இரண்டு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். சடலம் இன்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், அதனை பொறுப்பேற்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, உயிரிழந்தவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த அவருடைய நண்பன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அத்தோடு, அவர்களை அடையாளம் காட்ட முடியுமென்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், கொலையாளிகளை கைதுசெய்ய ரகசிய பொலிஸ் பிரிவு, யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் கீழான குழுவினர் மற்றும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் குழுவினர் என மூன்று குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் பிரதேசத்தில் பாரிய எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஆங்காங்கே பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.