யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலையும் அதற்கான நேர்முகத் தேர்வையும் பதவிக்கான நியமனத் தெரிவையும் உடனடியாக நிறுததி வைகக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் தற்போதைய அதிபராகப் பணியாற்றி வருகின்ற நாகராஜா மகேந்திரராஜா இந்த மனுவை தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை தொடர்பான விசாரணையிலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த மனுவில் முதலாவது எதிர் மனுதாரராக யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரையும் அவருக்குப் பின்னர் வட மாகாண கல்விப் பணிப்பாளர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி அமைச்சர், வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடமாகாண ஆளுநர், வட மாகாண முதலமைச்சர் ஆகியோரையும் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன், இந்த வழக்கின் விடயப் பொருள் தொடர்பாக தற்சமயம் உடனடியாக எந்த முடிவுக்கும் வரமுடியாது என குறிப்பிட்டு, இருந்த போதிலும், இது தேர்தல் காலம் என்ற காரணத்தால் தேர்தல் காலச் சட்டங்கள் மற்றும் 23.08.2015 நடத்தப்படவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றைக் கவனத்திற்கொண்டு, இடைக்கால நிறுத்தல் கட்டளையைப் பிறப்பிப்பதாகக் கூறினார்.
குறிக்கப்பட்ட இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய அதிபர் நியமனம் தொடர்பில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தினக்குரல் பத்திரிகையில் 26.06.2015 அன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்படுவதாகவும், அதற்கான விண்ணப்பங்கள், 10.07.2015 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளரின் கைக்கு கிடைக்கத்தக்கதாக பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் கோரப்பட்டிருந்தது.
இங்குள்ள முக்கிய விடயம் யாதெனில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்தன்று இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 26.06.2014 ஆம் திகதியில் இருந்து புதிய நாடாளுமன்றம் கூடுவதாக அரசாங்க வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள 01.09.2015 ஆம் திகதி வரையிலான காலம் தேர்தல் காலமாகும்.
தேர்தல் காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அரச பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல், தேர்வுகள் நடத்துதல், நியமனங்கள் செய்தல் அனைத்தும் தேர்தல் சட்டத்தை மீறிய செயலாகும். எனவே, யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலைக்கான புதிய அதிபரை நியமிப்பதற்காக 26.06.2015 அன்று வெளியிடப்பட்ட விளம்பரமும், அந்த விண்ணப்பத்திற்கான 10.07.2015 ஆம் திகதியாகிய கால எல்லையும், தேர்தல் கலாத்திற்குள் உட்பட்டுள்ளன.
எனவே இது தேர்தல் சட்டத்தை மீறிய செயலாகும் என நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையானது, தரம் 5 , அதற்குக் கீழ்ப்பட்ட வகுப்பு மாணவர்களையும் கொண்ட பாடசாலையாகும். அத்துடன், அகில இலங்கை ரீதியிலான 5 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் முன்னணியில் உள்ள பாடசாலையாகவும் இது உள்ளது.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை 23.082015 ஆம் திகதி நடத்தப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் பாடசாலையில் ஒரு நிர்ந்தர அதிபராக மனுதாரர் இருக்கும்போது புதிய அதிபரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரலானது, மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்டுத்தி, பரீட்சைக்கு இடையூறாக அமைந்துவிடும். பாடசாலை சமூகம், பெற்றோர், ஆசிரியகள் விசேடமாக மாணவர்கள் மற்றும் மனுதாரராகிய அதிபர் அகியோரின் மனநிலையைப் பாதிக்கச் செய்யும். எனவே பரீட்சை நடைபெறவுள்ள காலத்தில் அதிபர் அசிரியர்களை இடம் மாற்றம் செய்வது மாணவர்களின் எதிர்காலத்தைச் சிந்திக்காமல் எடுத்த தீரமானமாகவே மன்று கருதுகின்றது. அதுமட்டுமல்லாமால், தேர்தல் காலமாகிய தற்போதைய சூழலில், அரச உத்தியோகங்கள் சம்பந்தமாக நியமனம் செய்வது, இடம் மாற்றம் செய்வது, பணிநீக்குதல், ஒழுக்காறறு நடவடிக்கை எடுத்தல் என்பனவும் தேர்தல் காலச் சட்டங்களை மீறிய செயலாகவே மன்று நோக்குகின்றது. எனவே தேர்தல் முடிவடைந்து புதிய பாரளுமன்றம் பதவியேற்கும் நாளாகிய 01.09.2015 ஆம் திகதி வரை யாழ் இந்து ஆரம்பப் பாடாசலை அதிபர் சம்பந்தமான புதிய விண்ப்பம் கோரலையோ, அதனை மேற்கொண்டு செயற்படுத்துதலையோ, செய்யக் கூடாது என நிறுத்தி வைக்கும் இடைக்கால தடைக் கட்டளை பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
இந்த தடைக்கட்டளையை மாகாண கல்வி அமைச்சருக்கும் அமைச்சின் செயலாளருக்கும் உடனடியாக அறிவித்து யாழ் இந்து பதிய அதிபர் நியமனம் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் உடன் நிறுத்தும்படியான உத்தரவை அறிவிக்குமாறு பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய எதிர் மனுதாரர்கள் 01.09.2015 ஆம் திகதி மன்றில் ஆஜராகி தமது தரப்பு ஆட்சேபணைகளை முன் வைக்குமாறும், அதற்கான அறிவித்தல் கட்டளையையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த மனுவில் 5 ஆவது எதிர் மனுதாரராக வட மாகாண முதலமைச்சரின் பெயர் குறிப்பிடப்பட்டடுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், வருக்கும் மாகாண கல்வி அமைச்சுக்கும் இந்த விடயத்தில் நேரடியாக எதுவித சம்பந்தமும் இல்லாதபடியால் அவருடைய பெயரை உடன் நீக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, மனுதாரர் நீதிபதியின் முன்னிலையிலேயே முதலமைச்சரின் பெயரை நீக்கினார்.