Ad Widget

யாழ். ஆஸ்பத்திரிக்கு முன்பாக பயணிகளை ஏற்ற, இறக்கத் தடை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியில் தனியார் மற்றும் அரச பஸ்களில் பயணிகளை ஏற்றுவதோ இறக்குவதோ தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் சாரதிகள், நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக இடம்பெறும் விபத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

தனியார் பஸ்கள் மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ்கள் என்பன வைத்தியசாலை முன்பாக பயணிகளை ஏற்றவோ இறக்கவோ முடியாது. இது தொடர்பாக வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.

இனங்காணப்பட்ட பஸ்களின் சாரதிகள், நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.
எனவே, மக்களின் நலன்கருதி அரச மற்றும் தனியார் பஸ்களின் சாரதிகள், நடத்துநர்கள் கவனத்தில் எடுத்து பயணிகளை ஏற்றுவதையோ இறக்குவதையோ யாழ். பஸ் நிலையத்துடன் நிறுத்த வேண்டும். இதன் மூலம் விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதுடன், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Related Posts