Ad Widget

யாழ்.அரச அதிபர் திடீர் இடமாற்றம்

யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பதவி உயர்வுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செயலாளர் பதவி ஒன்று வழங்கப்படலாம் என்று தெரியவருகிறது. இவரது இடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எஸ். அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, வவுனியாவுக்கு புதிய அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா அரச அதிபராகக் கடமையாற்றிய பி.எஸ்.எம்.சாள்ஸ் மட்டக்களப்புக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு ள்ளதோடு இவரது இடத்துக்கு புதிதாக காலி மாவட்டத்தின் அரச அதிபராக பணியாற்றி வரும் விஜயரத்தின சகலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கில் போர் நிறைவுற்றதன் பின்னர் மன்னார் மாவட்டத்திற்கு சிங்கள அரச அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இப்போது வவுனியா மாவட்டத்திற்கும் சிங்கள அரச அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இந்த இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கியுள்ளது. 2010 ஜூலை மாதமே இமெல்டா சுகுமார் யாழ்.அரச அதிபராக பதவியேற்றிருந்தார். இரண்டு வருட சேவையை பூர்த்தி செய்வதற்கு முன்னர் அவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களாக வடபகுதியில் கடமையாற்றிய எனக்கு பதவியுயர்வு வழங்குமுகமாக இம்மாற்றம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிகிறேன்.எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் எனது புதிய பொறுப்பை ஏற்குமாறு நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன். அதற்கான ஏற்பாடுகளில் நான் ஈடுபட்டுள்ளேன் என்று யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறினார்.

வடக்கில் உள்ள அரச தரப்பு அரசியல் வாதிகளுக்கும் மாகாண ஆளுநருக்கும் அரச அதிகாரிகளுடனான உறவுகளில் விரிசல் நிலை ஏற்பட்டு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கும் வேளையில் அரச அதிபர்களுக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.ஊடகங்களில் தம்மை முதன்மைப்படுத்துகின்றனர் என்று அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அமைச்சர் ஒருவர் அதிகாரிகளை கடுமையாகச் சாடியிருந்தார்.

Related Posts