Ad Widget

யாழ் அரசாங்க அதிபர் அலுவலகத்தை பூட்டி முற்றுகை போராட்டம்

யாழில் சுவீகரிக்கப்படவிருந்த காணிகளை சுவீகரிக்காது தடுத்து நிறுத்துமாறு வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் யாழ். அரசாங்க அதிபர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

யாழ். ஆணைக்கோட்டை, கூழாவடி இராணுவ முகாம் பகுதியிலுள்ள ஐந்து தனிநபர்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு காணிகளை இன்று திங்கட்கிழமை நில அளவையாளர்கள் அளப்பதற்கு முற்பட்டனர்.

இந்தநிலையில், இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி, வட மாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராச கஜேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் யாழ். திருநெல்வேலி பகுதியில் உள்ள நில அளவையாளர் திணைக்களத்திலும் முற்றுகைப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

அதன் இறுதிக் கட்டமாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ். மாவட்ட அலுவலகத்தில் சந்தித்து மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதை நிறுத்துமாறும் கோரி மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

அத்துடன், அவர்கள் காணி சுவீகரிப்பு நிறுத்தப்படுமென்ற வாக்குறுதியினை தருமாறும் கோரிக்கை விடுத்ததுடன், பதில் தரும் வரைக்கும் அலுவலகத்தில் முன்பாக முற்றுகைப் போராட்டத்தினை மேற்கொள்வோம் என்றும் அரசாங்க அதிபருக்கு தெரிவித்தனர்.

இதன்படி, அரசாங்க அதிபரின் அலுவலகத்தினை முற்றுகையிட்டதுடன், அலுவலக கதவினை பூட்டி திறப்பினையும் எடுத்துக்கொண்டனர்.

எனவே, அரச அதிகாரிகள் அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டமையால், அரசாங்க அதிபரினால் பொலிஸார் யாழ். மாவட்ட செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இதன்படி யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களை கதவை திறக்குமாறு கோரினர்.

ஆனால், போராட்டக்காரர்கள் சம்மதிக்காத நிலையில், அரசாங்க அதிபர் அங்கிருந்து, பின் பக்க கதவினால், வெளியேறினார்.

இதேவேளை, எதிர்காலத்தில் தமது சொந்த காணிகளை சுவீகரிக்க முற்பட்டால், இதை விட மிகப் பாரதூரமான போராட்டத்தினை முன்னெடுப்போம் என கூறிய அவர்கள் நண்பகல் 12.00 மணியளவில் தமது முற்றுகைப் போராட்டத்தினை நிறுத்திக்கொண்டனர்.

Related Posts