Ad Widget

யாழ்ப்பாணம் விரைகிறது காவல்துறையின் உண்மையைக் கண்டறியும் குழு!

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, உண்மையைக் கண்டறியும் குழுவொன்றை யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்போவதாக தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் குழு இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளது எனவும், மாணவர்கள் மரணம் தொடர்பாக அந்தக்குழு விசாரணை நடாத்துமெனவும், தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கொலை தொடர்பான விசாரணை தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மையைக் கண்டறியும் குழுவும் விசாரணை நடாத்தவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து, அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது காவல்துறை மா அதிபரின் பொறுப்பாகும்.

அத்துடன் தேசிய ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட குழுவானது உண்மையை மாத்திரமே கண்டறியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மாணவர்கள் விபத்தினாலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறி உண்மையை மூடி மறைத்தனர். பின்னர் நடைபெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையின்போதே ஒரு மாணவன் துப்பாக்கியால் சுடப்பட்டும் மற்றைய மாணவன் விபத்திலும் உயிரிழந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Posts