Ad Widget

யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி!

வாக்களிப்பு, நிலையங்களில் கொரோனா பரவும் அபாயத்தை தடுப்பதற்கு சகல விதமான கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதுகுறித்த சுகாதார நடைமுறைகளை மற்றும் தேர்தல் தொடர்பான தகவலை யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

1. கட்டாயமாக முகக் கவசம் அணிதல்
2. கை கழுவும் ஏற்பாடு
3. ஒரு மீற்றர் இடைவெளி
4. ஆளடையாள ஆவணங்களை தொடாமலேயே பரிசீலித்தல்
5. கிருமி நீக்கும் திரவம் பயன்படுத்தி கை சுத்தம் செய்தல்
6. மை பூசுவதற்கு ஒவ்வொருவருக்கும் தனித் தனியான தூரிகை
7. வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதற்காக கறுப்பு அல்லது நீல நிற பேனையை வாக்காளர்களே எடுத்துவரல்
8. வாக்களிக்கும் சிற்றறையை அடிக்கடி தொற்று நீக்கம் செய்தல்.
9. சுகாதாரம் தொடர்பான விடயங்களை கவனிப்பதற்கு என வாக்களிப்பு நிலையங்களில் விசேடமான அலுவலர்கள் நியமிக்கப்படல் என்பன நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

வாக்காளர்கள், ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு இரகசியமாகவும் சுதந்திரமாகவும் வாக்கினை அளிக்கமுடியும். நீங்கள் இடும் வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்பதனை எவராலும் எச்சந்தர்ப்பத்திலும் அறிந்துகொள்ள முடியாது. வாக்களிப்பதனைப் போலவே வாக்குகளை செல்லுபடியான விதத்தில் அளிப்பதும் முக்கியமானது.

வாக்குச் சீட்டில் தாம் விரும்பும் கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகில் வலது பக்கத்தில் உள்ள வெற்றுக் கூட்டில் தெளிவாக புள்ளடி இடுவதன் மூலம் வாக்கினை அளிக்கமுடியும். ஒருவர் தான் விரும்பும் ஒரு கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கு மாத்திரமே வாக்கினை அளிக்கமுடியும்.

ஒன்றுக்கு மேற்பட்ட கூடுகளில் அடையாளமிடுவதால் வாக்குகள் நிராகரிக்கப்படும். வாக்குச்சீட்டின் அடியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறித்து ஒதுக்கப்பட்டுள்ள இலக்கத்தின் மீது புள்ளடி இடுவதன் மூலம் குறித்த கட்சி அல்லது சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமது விருப்பத் தெரிவுகளைக் குறிப்பிடலாம். இவ்வாறு ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்களுக்கே தமது விருப்பு வாக்கினை அளிக்க முடியும்.

வாக்களிக்காமல் இருப்பது ஒருவர் தன்னுடைய உரிமையை இழப்பதற்குச் சமனானதாகும். ‘வாக்குரிமையை பாதுகாப்போம் பாதுகாப்பாக வாக்களிப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts