Ad Widget

யாழ்ப்பாணத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரிடம் மாட்டினர்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வீதியில் செல்லும் பெண்களின் தங்க ஆபரணங்களை அபகரித்த மோட்டார் சைக்கிள் வழிப்பறி சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளைச் சந்தேக நபர்களிடமிருந்து வழிப்பறிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், 9 தங்கச் சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 9 தங்கச் சங்கிலிகளில் 6 தங்கச்சங்கிலிகள் முறைப்பாடு வழங்கியவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனைய 3 தங்கச்சங்கிலிகள் தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும் பொலிஸ் நிலையங்களில் கிடைக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

புத்தூர் சோமஸ்கந்த வித்தியாலய ஒழுங்கைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமாக இலக்கத்தகட்டினை மறைத்து கட்டியவாறு பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் மறித்துள்ளனர்.

அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் சோதனையிட்ட போது, அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலியொன்றை மீட்டதுடன் 2 கிராம் ஹெரோயின் போதப் பொருளையும் பொலிஸார் மீட்டனர்.

அதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார், பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் போது அவர்கள் இருவரும் இருபாலையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களே அண்மைக்காலமாக வீதிகளில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலியை அறுத்துவந்துள்ளதாக பொலிஸார் கண்டறிந்தனர்.

கோப்பாய், கொடிகாமம், அச்சுவேலி , சாவகச்சேரி, சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெண்களிடம் அறுக்கப்பட்ட சங்கிலிகளை திருநெல்வேலியில் உள்ள நகைக்கடையொன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் அடகுவைத்த நகைகளையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 9 தங்கச் சங்கிலிகள், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றையும் நீதிமன்றில் கையளிக்கவுள்ளனர்.

Related Posts