Ad Widget

யாழ்ப்பாணத்தில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து 9 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை மாற்றி கல்வீடுகளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 அளவில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை சம்பூரில் அமையவுள்ள அனல்மின் நிலையத் திட்டத்தை நிறுத்தி, மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்த வலியுறுத்தியும் சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற புனர்நிர்மாண அமைச்சால் வழங்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீடுகள் பிரதேச காலநிலைக்கும், சமூக பண்பாட்டுச் சூழலுக்கும் முற்றிலும் பொருத்தமற்றவை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் சுகாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பொருத்து வீடுகள் பாதகம் விளைவிக்கக்கூடியவை என சமூக ஆர்வலர்களும் துறைசார் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி, எமது காலநிலைக்கும் சமூக பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் பொருந்தக்கூடிய நிரந்தர கல்வீடுகளை அமைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக மட்ட அமைப்புக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக அக்கறை கொண்ட மக்கள் சார்பு அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கும் மக்கள் ஆகியோரை கலந்து கொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Related Posts