Ad Widget

யாழ்ப்பாணத்தில் எதற்காக இந்த ஆளுனர் மாநாடு நடைபெற்றது?

நீண்ட நாள் ஆரவாரத்திற்கு பின்னர் 15 ஆவது இலங்கை ஆளுனர்களின் மாநாடு நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த மாநாடு ஏன் எதற்காக நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னர். நடந்து முடிந்திருக்கின்றது. இதற்காக பல லட்சம் ரூபா பணம் தாரைவார்க்கப்பட்டுள்ளது.
நேற்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை மூன்று நாள் குத்தகைக்கு எடுத்த வடக்கு மாகாணம், இந்த மாநாட்டையும் மாநாட்டை முன்னிட்டு கண்காட்சியையும் நடத்தியிருக்கின்றது. இன்று மாநாட்டுக்கு வந்தவர்களுக்கான சுற்றுலா நாள்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் அந்த அழிவுகளில் இருந்து மீள்வதற்கு முன்னர், இந்த ஆடம்பர மாநாடு ஒரு கேலிக்கூத்தாக அமைந்தது தான் வேடிக்கையான விடயம். உண்மையில் வன்னியில் மீள்குடியேறிய மக்கள் இன்னமும் அரசாங்கத்தினால் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமல், தறப்பால் கொட்டகைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களின் வாழ்வு என்பதற்கு மேலாக, பாடசாலைகள் கூட புனரமைத்துக் கொடுக்கப்படாமல் எப்போது மழைவரும், வகுப்பறைக்குள் தண்ணி வரப்போகுதே என்ற ஏக்கத்துடன் வன்னியில் மாணவர்களின் கல்வி நிலையிருக்கின்றது.

ஒரு நாள் கூத்துக்காக 300 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்பது வடக்கு மாகாண ஆளுனரிற்கு பெரிய விடயமாக இருக்காதபோதும், வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அந்தப்பணம் பல தேவைகளை நிறைவு செய்யக் கூடிய ஒன்றாகத்தான் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த 300 லட்சம் ரூபாவும் வடக்கு மாகாணத்தின் திறைசேரியில் இருந்து எடுக்கப்பட்ட பணம். இது எமது மக்களின் வரிப்பணம், அந்த வரிப்பணத்தில் அபிவிருத்தி வேலைகள் எவ்வளவோ செய்யவேண்டி இருக்கும் நிலையில் 72 மணித்தியாத்தில் அது கரைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஆளுனர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுனர் நிவாட் கப்ரால், ஒரு மணித்தியாலம் உரையாற்றுவதற்கு பல லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணம் போருக்குப் பின்னர் 27 வீத வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சி வீதி அபிவிருத்தி, கட்டிடங்கள், வங்கிகள் என்று அடுக்கிக்கொண்டு போனார்.

அந்த போருக்குப் பின்னராக காலத்தில் வடபகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. போருக்குப் பின்னரான அபிவிருத்தியால் 99 வீதம் நன்மை அடைந்தவர்கள் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தான் என்பதே உண்மையான விடயம்.

வடக்கில் பல வங்கிகள் தோற்றம் பெற்று மக்களை கடன்காரர்கள் ஆக்கியது தான் மிச்சமே ஒழிய, அதனால் நன்மை என்று ஒன்றும் இல்லை. தமிழ் மக்கள் சேமிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதை வைத்துக் கொண்டு அவர்களின் பணம் தென்னிலங்கையின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படுகின்றதே தவிர, வடக்கின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படுவதில் மாறாக எமது மக்களின் பணம் ஆடம்பர மாநாட்டுக்கும், ஆளுனர்கள், ஆளுனர்களின் குடும்பங்களின் சுற்றுலாவிற்கும் களியாட்ட கவர்ச்சி நடனங்களுக்கும் தான் பயன்படுத்தப்பட்டுடிருக்கின்றது.

இந்த மாநாடு தொடர்பான உண்மையான தகவல்களை சில ஊடகங்கள் வெளியிட்டுடிருந்தது. இந்த விபரங்களை மக்கள் நன்கு புரிந்து கொண்டு இனிவரும் காலங்களில் செயற்பட வேண்டும்.

பூனை மெலிந்தால் சுண்டெலிக்கு விளையாட்டு என்பது போல, தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற ஆணவத்தில் வடக்கு மாகாண சபை நிர்வாகம் தன்னிச்சை செயற்பட்டு வருகின்றது.

வன்னியில் படிப்பதற்கு ஒழுங்கான வகுப்பறையும் இருப்பதற்கு வீடும் இல்லாத நிலையில் அவலப்படும் மக்கள் நிலை எப்போது கவனத்தில் எடுக்கப்படும். வகுப்பறை திருத்துவதற்கு பணம் இல்லை என்று கைவிரித்த சந்திரசிறி, 3 கோடியில் மாநாட்டை நடத்திருக்கின்றார். இது அவரின் சாதனையா அல்லது அவரிற்கான சோதனையா? காலம் தான் தீர்மானிக்கும்.

Related Posts