Ad Widget

யாழ்ப்பாணத்தில் இன்று 17 பேரின் மாதிரிகள் பரிசோதனை – எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை

யாழ்ப்பாணத்தில் கோரோனா தொற்றுத் தொடர்பில் 17 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எவருக்கும் பாதிப்பு இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள பிசிஆர் இயந்திரத்தின் ஊடாக 17 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. கோரோனா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பரிசோதனை செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டு தங்கி இருந்தவர்கள் மூவருக்கும் வைத்தியசாலைக்கு வெளியே தொற்றுக்கு உள்ளனவர்களுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட 14 பேருக்கும் என 17 பேருக்கு கோரோனா (COVID – 19) பரிசோதனை செய்யப்பட்டது.

தொற்றுக்கு உள்ளனவர்களுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட 14 பேரில் மானிப்பாய் பகுதியில் எட்டு (8) பேருக்கும் அரியாலைப் பகுதியில் ஆறு (6) பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்தப் பரிசோதனையில் 17 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (ஏப்ரல் 3) தாவடி பகுதியில் 18 பேருக்கு சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் இன்று சனிக்கிழமை பின்னிரவு வெளியிடப்படும்” என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Posts