யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வெளியே மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் நீர்கொழும்பு, அக்கரைப்பற்று, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டன.
நாட்டில் கோரானா நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்ப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் அனுமதி கிடைக்காததால் கொழும்பு, கம்பஹா மாவடங்களுக்குள் வெளிமாவட்டங்களிலிருந்து செல்லும் பொதுப் போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி தனராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாவது;
இன்று அதிகாலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்புக்கான சேவை நீர்கொழும்பு வரைக்கும் இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சேவையானது ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேருந்து சேவை இடம்பெறவுள்ளது. எனினும் இது காலப்போக்கில் அதிகரிப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன – என்றார்.