Ad Widget

யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களிலும் தரப்பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் வாகனங்களை தரப்பரிசோதனை செய்யும் நடவடிக்கையானது யாழ். மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் திடீரென அறிவிக்கப்படாத நாட்களில் மேற்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள யாழ். மாவட்ட பொறுப்பதிகாரி கோபாலபிள்ளை மதிவண்ணன் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் வாகனங்களை தரப்பரிசோதனை செய்யும் நடவடிக்கை யாழ்.பொதுநூலகத்துக்கு வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது. இதில் தரப்பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

வாகனங்களை வான், பஸ் ஆகியவற்றை ஒரு பிரிவாகவும், முச்சக்கரவண்டிகளை ஒரு பிரிவாகவும் பிரித்து தரப்பரிசோதனை செய்யப்பட்டது, முதல் பிரிவில் 42 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அவற்றில் 27 வாகனங்களில் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இரண்டாவது பிரிவான முச்சக்கரவண்டிகள் 34 தரப்பரிசோதனை செய்யப்பட்டு 17 முச்சக்கரவண்டிகளில் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பிழைகள் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களை சீர் செய்வதற்கு 10 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் சீர் செய்து, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள பிரிவில் வந்து காண்பிக்க முடியும். 10 நாட்களுக்கு பிழைகளைத் திருத்தாதவர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடமுடியாது.

இந்த தரப்பரிசோதனை செய்யும் நடவடிக்கை வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் உள்ளிட்ட இடங்களில் அறிவிக்கப்படாத ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Posts