Ad Widget

யாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள் வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது

பாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு யாழ்கோ நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. ஒவ்வொன்றும் ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான ஒன்பது பால் பரிசோதனை மானிகளை வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் யாழ்கோ நிறுவனத்தின் தலைவர் இ.சர்வேஸ்வராவிடம் கையளித்துள்ளார்.

இந்தக் கையளிப்பு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.04.2107) திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்கோவின் தலைமைப் பணிமனையில் நடைபெற்றுள்ளது.

இப்பரிசோதனை மானிகள் பாலில் உள்ள கொழுப்பின் அளவு, பாலில் உள்ள நீரின் அளவு, பாலில் தண்ணீர் கலப்புச் செய்யப்பட்டிருப்பின் அத்தண்ணீரின் அளவு போன்ற பல விபரங்களைத் துல்லியமாக அளவிடக்கூடிய இலத்திரனியல் சாதனங்கள் ஆகும். இவற்றைப் பயன்படுத்திப் பாலைப் பரிசோதனை செய்வதன் மூலம் பாலின் தரத்தை உறுதி செய்து நுகர்வோருக்கு வழங்க முடியும்.

யாழ்கோ நிறுவனம் கால்நடை வளர்ப்பாளர்களிடம் இருந்து தினமும் சராசரியாக 6000 இலீற்றர்கள் பாலைக் கொள்வனவு செய்து உடன் பாலாகவும், பதப்படுத்திய பால் உணவுப் பொருட்களாகவும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பால் பரிசோதனை மானிகளை கையளிக்கும் நிகழ்ச்சியில் கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரன், உதவிப் பணிப்பாளர் வக்சலா அமிர்தலிங்கம், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பொ.மோகன் ஆகியோருடன் யாழ்கோ நிறுவனத்தின் நெறியாளர்குழு உறுப்பினர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Related Posts