Ad Widget

யாழில் 993 பேர் சாட்சியமளித்துள்ளனர்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற 6 அமர்வுகளில் 1,620 பேர் அழைக்கப்பட்டு அவர்களில் 993 பேர் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்துக்கான அமர்வுகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடைபெற்று நேற்று புதன்கிழமையுடன் (16) முடிவடைந்தது.

11 ஆம் திகதி நல்லூர் பிரதேச செயலகத்துக்கான அமர்வு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் 235 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டு, அவர்களில் 130 பேர் சாட்சியமளித்தனர். புதிதாக 44 பேர் பதிவுகளை மேற்கொண்டு, அதில் 35 பேர் சாட்சியமளித்தனர்.

12 ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கான அமர்வு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் 266 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டு, 148 பேர் சாட்சியமளித்தனர். புதிதாக பதிவுகளை மேற்கொண்ட 53 பேரில் 23 பேர் சாட்சியமளித்தனர்.

13ஆம் திகதி கரவெட்டி, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளுக்கான அமர்வு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் 290 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டு, 168 பேர் சாட்சியமளித்தனர். புதிதாக 57 பேர் பதிவுகளை மேற்கொண்டு அவர்களில் 2 பேர் சாட்சியமளித்தனர்.

14ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான அமர்வு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் 271 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டு, 158 பேர் சாட்சியமளித்தனர். புதிதாக 61 பேர் பதிவுகளை மேற்கொண்டு அவர்களில் ஒருவர் சாட்சியமளித்தார்.

15ஆம் திகதி சண்டிலிப்பாய், சங்கானை பிரதேச செயலர் பிரிவுகளுக்கான அமர்வு சங்கானைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் 303 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டு, 173 பேர் சாட்சியமளித்தனர். புதிதாக 51 பேர் பதிவுகளை மேற்கொண்டு 2 பேர் சாட்சியமளித்தனர்.

16ஆம் திகதி உடுவில், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் 255 பேர் அழைக்கப்பட்டு, 148 பேர் சாட்சியமளித்தனர். புதிதாக 71 பேர் பதிவுகளை மேற்கொண்டனர். புதிதாக பதிவு செய்த எவரும் சாட்சியமளிக்கவில்லை.

சாட்சியமளிக்க வருகை தந்த 993 பேர் மற்றும் புதிதாக பதிவு செய்ய வந்த 337 பேர் மொத்தம் 1262 பேர் அமர்வுகளுக்கு வருகை தந்திருந்தனர் என்றார்.

Related Posts