Ad Widget

யாழில் 16.4% நீரிழிவு நோய்

யாழ்.மாவட்டத்திலுள்ளவர்களில் 16.4 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோயுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறுநீரக வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார்.

நீரிழிவு தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

இலங்கையில் வடக்கு, கிழக்கு தவிர்ந்து மற்றைய மாகாணங்களைச் சேர்ந்தவர்களில் 10.3 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய்த் தாக்கம் உள்ளது. 2030ஆம் ஆண்டு இலங்கையில் 13.5 வீதமானவர்கள் நீரிழிவு நோய்த்தாக்கத்துக்கு உள்ளாவர்கள் என்று கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் தற்போதே 16.4 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றைய சிகிச்சை நிலையங்களில் நீரிழிவு நிலையங்கள் அடையாளம் காணப்படுவதுடன், வைத்தியசாலையில் இயங்கும் விசேட நீரிழிவுப் பிரிவில் 10534 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 விடுதிகளில் நீரிழிவு நோய்ச் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

வடக்கில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளமையால், நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவுள்ளது. இளைஞர்களில் பலர் போரில் இறந்துள்ளதுடன், பலர் வெளிநாடுகள் நோக்கிச் சென்றுள்ளனர்.

இதனைவிட, வடக்கில் உள்ளவர்களில் பெரும்பாலான உறவுகள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்கள் தாங்கள் விடுமுறைக்கு இங்கு வரும் போது, அதிகளவான சொக்லெட்டுக்களை தம்முடன் எடுத்து வருகின்றனர். அதனை அதிகளவில் உண்பதால் வடக்கில் உள்ளவர்களுக்கு இந்த நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளது.

அத்துடன், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாமலுள்ளது. சீனி, மா பாவனை அதிகரித்துள்ளது. அத்துடன் போதிய உடற்பயிற்சியும் செய்வதில்லை.

நீரிழிவு நோய்த் தாக்கத்தால் கண் பார்வை மங்கும், இருதயம், சிறுநீரகம் பாதிக்கப்படும் என்றார். யாழ்ப்பாணத்தில் அதிகளவான சிறுநீரக நோயாளிகள் இனங்காணப்பட்டமைக்கும் நீரிழிவு நோயே காரணம். தொற்றாத நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற்று, நோயைக் கட்டுப்படுத்த முடியும். சிகிச்சைக்கு வருபவர்கள், நோயின் தாக்கல் குறைந்தவுடன் சிகிச்சையை கைவிடுகின்றனர்.

நீரிழிவு நோயாளிகளில் எடை கூடியவர்கள், குறைந்தவர், உயரமானவர், குட்டையானவர் என தனித்தனியான மருந்துகள் வழங்கப்படும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் தங்களுக்குள் கதைத்து தாங்களாகவே மருந்துகளை வாங்கி நுகர்கின்றனர். இளைஞர்களும் இந்த நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது அண்மைக்காலங்களில் அடையாளங் காணப்பட்டுள்ளது என்றார்.

Related Posts