Ad Widget

யாழில் 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு!!

யாழ். மாவட்டத்தில் ஏறக் குறைய 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் காணப்படுகிறது. முன்னைய காலத்தில் வயது முதிர்ந்தவர்களுக்கு வருகின்ற இந்த நீரிழிவு நோய் இன்றைய காலத்தில் இளம் சமுதாயத்தினரையும் தாக்கி வருகிறது.

20, 30, 40 வயதுடையவர்களுக்கும் இந்த நீரிழிவு நோய் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் எமது வாழ்க்கை நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், அப்பியாசமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தங்கள் போன்றவையே நீரிழிவுத் தாக்கத்திற்கு வழிகோலும் காரணிகளாகும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் சிவமகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

முதியோரைக் கெளரவித்தலும் புற்றுநோயாளர்களிற்கு உதவி வழங்கலுக்காக நிலையான வைப்புக்குரிய நிதி திரட்டலுக்கான விழாவும் நேற்று வியாழக்கிழமை(01) பிற்பகல் குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய மண்டபத்தில் ஆலயத் தலைவரும், ஓய்வுநிலைக் கிராம அலுவலருமான சோ. பரமநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதியோர்களும், குழந்தைகளும் உளத்தாலும், உடலாலும் குழந்தைகள் போல மாறிக் கொண்டிருப்பவர்கள். முதியோர்களைக் கெளரவிப்பதற்காக இவ்வாறானதொரு பெருவிழாவை எடுத்தமையையிட்டு நான் ஆலய நிர்வாகத்தினருக்கு நன்றி கூறுகின்றேன்.

முதியோர்கள் எமது கிராமத்தின் சொத்துக்கள். ஏனெனில் அவர்கள் எத்தனையோ அனுபத் தடங்களைக் கடந்து வந்தவர்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு எமக்கு எத்தனையோ விடயங்களிருக்கிறது. அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஆரோக்கிய வாழ்வு பற்றியும் ஓரிரு விடயங்கள் கூறலாமென நினைக்கின்றேன். ஆரோக்கியமான வாழ்வு என்றால் உடல் ஆரோக்கியம் மாத்திரம் தானெனப் பலர் நினைப்பார்கள். ஆனால், ஆரோக்கியமென்பது உடல், உள, சமூக, ஆன்மீக ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் இணைகின்ற போது தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறான் என எம்மால் கூற முடியும்.

தற்போது இளம் சமுதாயத்தினரில் பலரும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகச் சொல்லப் போனால் நீரிழிவு நோயைக் குறிப்பிட முடியும். எமது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 60 சிறுவர்கள் நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தச் சிறுவர்களுக்குத் தேவையான இன்சுலின் மருந்து வைத்தியசாலையில் கிடைப்பதில்லை. நாங்கள் பல நன்கொடைகள் மூலம் பெற்று அந்த இன்சுலின் மருந்துகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைய காலத்தில் மனம் விட்டுப் பேசுவதற்கு எவருமில்லாத வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எத்தனையோ பேர் தங்களுக்கு முகநூலில் ஐந்தாயிரம் நண்பர்களிருக்கிறார்கள் எனக் கூறுவர். ஆனால், அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் நண்பர்களைத் தேடுவது மிக அரிதாகவுள்ளது. இவ்வாறான போலி உலகில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

Related Posts