நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான கிறிஸ்தோபர் பிரனீத், நவாலியைச் சேர்ந்த வின்சன், முச்சக்கர வண்டி சாரதியான சாய்மாறன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வாள் மற்றும் கத்திகளுடன் வந்த ஆயுததாரிகளே சரமாரியான வாள் வீச்சை அங்கு நின்றிருந்தவர்கள் மீது நடத்தியுள்ளனர்.
இதில் முதலில் பிரனீத், வின்சன் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி இரத்தம் சிந்தியபடி கிடந்துள்ள நிலையில், அவர்களைக் காப்பாற்ற முற்பட்ட சாரதி சாய்மாறன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அங்கு நின்று அடாவடியில் ஈடுபட்ட ஆயுததாரிகள் அதன் பின்னர் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில் குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியினை பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.