Ad Widget

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேருக்கு பிணை

யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு யாழ் மேல் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கியுள்ளது.

யாழில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட “றோக் ரீம்” என்ற குழுவை யாழ் பொலிஸார் தீவிர தேடுதலில் பின் கைது செய்தனர்.

குறித்த நபர்களிடம் இருந்து வாள்கள், கைக்கோடரிகள், மற்றும் கைக்குண்டு போன்றன மீட்கப்பட்டதாக கூறி யாழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

இக்குழுவின் தலைவராக பிரபல பாடசாலையின் மாணவத்தலைவனும், அவுஸ்ரேலிய மினி ஒலிம்பிக் தடகள போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற செந்தூரன் என்பவர் இனம் காணப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ் நீதவான் நீதிமன்றால் கடந்த 7 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் குறித்த 8 சந்தேக நபர்களின் பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குறித்த நபர்களை கடுமையாக எச்சரித்ததுடன் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து, 2 இலட்சம் பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதித்தார்.

அத்துடன், எதிர்வரும் 4 மாதம் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் யாழ் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திடும்படியும், பிணை வழங்கப்படும் காலப்பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் பிணை நிராகரிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Related Posts