யாழில் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுக் கலந்தாலோசனை!!

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30 மற்றும் 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கட்டணக் கணிக்கைக் கையேட்டின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது கட்டண திருத்தத்துக்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL), இலங்கை மின்சார சபை (CEB), கடந்த 16 ஆம் திகதி சமர்ப்பித்துள்ளது.

இந்த முன்மொழிவின் படி, 2025 ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்துக்கு மின்சாரக் கட்டணத்தை 18.3% இனால் உயர்த்த வேண்டுமென இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்கும் பணியை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 17(b) மற்றும் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30(3)(b) ஆகிய பிரிவுகளின் படி, இந்தக் கட்டணத் திருத்த முன்மொழிவு பற்றிய பொதுக் கலந்தாலோசனையும், பங்குதாரர்களின் கருத்தறிதலும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடாத்தப்படவுள்ளன.

அந்தவகையில் பிரதான பங்குதாரர்களாகிய மின்நுகர்வோரின் (பொது மக்களின்) கருத்தறியும் நிகழ்வின் வடமாகாணத்துக்கான கலந்தாலோசனை எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பதிவு செய்ய விரும்புபவர்களிடமிருந்து எழுத்து மூலமான ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Related Posts