Ad Widget

யாழில் மாணவர்களை இலக்குவைத்து “ஹெரோய்ன் ரொபி“

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் ரொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி, கல்வியமைச்சரிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அளித்த பதிலையடுத்தே, அவர் மேற்கண்டவாறு ​குறிப்பிட்டார்.

முன்னதாகக் கேள்விகளை கேட்டிருந்த பத்திரண எம்.பி, பிரபல பாடசாலைகளுக்கு இடையில் ​நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பியர் கம்பனிகள் அனுசரணை வழங்குகின்றனவா என்பதையும், இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு தூண்டப்படுகின்றார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்வரா உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.

அக்கேள்விகளுக்கு பதிலளித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், அனுசரணை வழங்குவதற்கு, அவ்வாறான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்பதனால், ஏனைய கேள்விகள் ஏற்படுடையதல்ல என்றார்.

குறுக்கிட்ட புத்திக பத்திரண எம்.பி, “பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்துக்குள் இல்லாவிட்டாலும், போட்டிகள் நடைபெறுகின்ற பாடசாலைகளுடன் இணைந்த மைதானங்களுக்கு, மிகவும் அண்மையில் இவ்வாறு பியர் விற்பனை செய்யப்படுகின்றது.

“பியரில் ஆரம்பிப்பதுதான், இறுதியில் செறிவுகூடிய மதுபானத்தை பருகும்வரை செல்லும். ஆகையால், பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைளை நிறுத்தவேண்டும்.
“இதேவேளை யாழ்ப்பாணத்தில், ஹெரோய்ன் கலந்த 50 டொபிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுவும் மாணவர்களை இலக்குவைத்தே முன்னெடுக்கப்படுகின்றது” என்று குறிப்பிட்டார்.

இவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில், கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, அவற்றை முற்றாகத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Posts