Ad Widget

யாழில் போராட்டம் நடத்த தடை!

ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது, நகரப்பகுதி மற்றும் நிகழ்வு இடம்பெறும் இடங்களில் போராட்டம் மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க முடியாதவாறும் யாழ்.பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினைப் பெற்றுள்ளனர்.

தேசிய தமிழ் தின நிகழ்வு யாழ்.இந்துக் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் கடந்த 19 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்நிலையில், ஜனாதிபதி அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கை மேற்கொள்ளாது யாழில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வருகை தரவுள்ளதை எதிர்த்து பல தரப்பினர் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்கள்.

அந்த வகையில், ஜனாதிபதியின் வருகையின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையில் போராட்டங்களையோ, எதிர்ப்பு நடவடிக்கைகளையோ முன்னெடுத்தால் கைது செய்வதற்கும், எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கையையும் முன்னெடுக்காது தடுப்பதற்கும் யாழ்.பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தடை உத்தரவினைப் பெற்றுள்ளனர்.

Related Posts