யாழில் பெண்ணைத் தாக்கி பாரிய கொள்ளை

அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியில் உள்ள வீட்டுக்குள், வெள்ளிக்கிழமை (09) மாலை புகுந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த பெண்ணைத் தாக்கி, 52 பவுண் தங்க நகை மற்றும் 16 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான ஸ்ரீமதி நடேசமூர்த்தி (வயது 59) என்ற பெண், ஆபத்தான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பெண்ணின் வீட்டில், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளதுடன். பெண்ணின் உறவினர்கள், யாழ். நகரப்பகுதியில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அதனையடுத்து, மாலை 6:30 மணியளவில் வீட்டின் பின்பக்கமாக நுழைந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த பெண்ணின் கழுத்துப் பகுதியில், பொல்லால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பெண் மயங்கியதை அடுத்து, அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டில் வைத்திருந்த மணமகளின் நகைகள், பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இரவு வெகுநேரம் ஆன நிலையில், மின்விளக்கு ஒளிராமல் வீடு இருளில் மூழ்கியிருந்ததை கண்ட அயலவர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, குற்றுயிராய் கிடந்த பெண்ணை, அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு பெண் மாற்றப்பட்டுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட நகையின் பெறுமதி 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் நகை, பணம் உட்பட 35 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவ்வருடத்தில் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமாக இது பதிவாகியுள்ள நிலையில், குற்றத்தடுப்பு பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts