Ad Widget

யாழில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் வழக்க ஏற்பாடு

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலமைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்க யாழ் மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அம் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள்ள தீவுப் பகுதிகளான நெடுந்தீவு, வேலணை, காரைநகர் மற்றும் ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளில் இந்த குடிநீர் யாழ் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால் வழங்கப்படவுள்ளது.

மேற்படி தீவுப்பகுதிகளிலுள்ள 7693 குடும்பங்களுக்கு இவ்வாறு குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுச் சான்றிதழ்களை யாழ் மாவட்ட மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு வரையிலான மாவட்டத்தின் சகல பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுகள் கணனிமயமாக்கப்பட்டுள்ளதுடன் LGN வலையமைப்பிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே யாழ் மாவட்டத்தில் வதியும் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுச் சான்றிதல்களை அம் மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலகங்களில் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.

Related Posts